வதோதராவில் இருந்த என்னை வாரணாசியில் தேர்ந்தெடுத்தீர்கள் – பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டபேரவைக்கான 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல், எஞ்சியுள்ள 40 தொகுதிகளில், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் திறந்த வேனில் சென்று நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அதன் நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தலைவருமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு மோடி பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர், காசி விசுவநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று மோடி வழிபட்டார். பின்னர், அங்கிருந்து ஜான்பூருக்குச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மோடி பேசியதாவது:-

நம் நாட்டில் ஏதாவது நல்ல காரியங்களைத் தொடங்கும்போது, காயத்ரி மந்திரத்தை நாம் உச்சரிப்போம். ஆனால், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியோ காயத்ரி பிரஜாபதி மந்திரத்தை உச்சரிக்கிறது. (பாலியல் புகாரில் சிக்கியுள்ள சமாஜவாதி அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை மோடி மறைமுகமாகக் குறிப்பிட்டார்).

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எப்படியிருக்கிறது உங்களுக்கே தெரியும். ஜான்பூரில் மாலை இருட்டிய பிறகு தாய்மார்களும், சகோதரிகளும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிகிறதா? அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தபோது, அமேதி தொகுதியில் அந்த அமைச்சரை ஆதரித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் காயத்ரி பிரஜாபதியும் கலந்து கொண்டார். ஆனால், அந்த அமைச்சர் தற்போது தலைமறைவாகி விட்டார்.

குஜராத்தின் வதோதராவில் இருந்த என்னை உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் போனஸ் வாக்குகளுடன் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம்.

இவ்வாறு மோடி பேசினார்.

Related posts

Leave a Comment