வெள்ளி அன்று துதிபாடி, கடைக்கண் பட்டால் போதுமே
அன்னை மீனாட்சி கருணையால், மங்களம் உண்டாகுமே
அதிசயம் படைத்து காக்கும் சக்தியே; உன் மகிமை
பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன்.
மன பலம், தேக பலம், காரியங்கள் வெற்றி பெற
வேண்டும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், என்றும் தர
வடைமாலை சாத்திய பரவச விஸ்வரூபம்; உன் மகிமை
பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன்.
தமிழரின் அறுபடை வீடு கொண்ட வேல்முருகா
வந்தது வந்தது தைப்பூசம் பக்தி விழா, அரோகரா
கந்த சஷ்டி கவசமாய் காத்திடுமே; உன் மகிமை
பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன்.
அரை முழம் பூ தர ஒருவன் வரணும் என்று
ஐந்து முழம் அம்மனுக்கு, பூக்காரி நாடிச் சென்று
திருவேற்காடு கருமாரி அம்மன் தாயே; உன் மகிமை
பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன்.
இந்திரனே சூரியனே வேறுபாடு எங்கே உண்டு
வணங்கியோர் வணங்காதோர் ஒன்றாய் கண்டு
அகிலம் காத்து நித்தம் அருள்வாயே; உன் மகிமை
பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன்.