இம்பால்,
மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். முதல்-மந்திரியாக பைரன் சிங் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அடுத்த வாரம் அவர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லை
நடைபெற்று முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி இப்போது 28 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
இரண்டாவது பெரிய கட்சியாக 21 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதா வந்துள்ளது. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ், லோக்ஜனசக்தி, சுயேச்சை ஆகியோர் தலா 1 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். உதிரிக்கட்சிகளின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை, மணிப்பூரில் ஏற்பட்டது.
இருதரப்பும் உரிமை கோரல்
சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவராக இபோபி சிங்கும், பாரதீய ஜனதா தலைவராக பைரன் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருமே ஆட்சி அமைக்க கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து உரிமை கோரினர்.
இந்த நிலையில் மணிப்பூரில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று பதவி ஏற்பு
அதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
முதல்-மந்திரியாக பைரன் சிங் இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருடன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
பைரன் சிங் தேசிய கால்பந்து வீரராக, பத்திரிகையாளராக திகழ்ந்தவர். பின்னர் 2002-ம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் சேர்ந்தார். எம்.எல்.ஏ. ஆகி மந்திரி பதவியும் வகித்தார். 2004-ம் ஆண்டு அந்த கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அரசியல் பிரவேசம் செய்த 15 ஆண்டில் அவர் முதல்-மந்திரி பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.
அவர் சட்டசபையை 22 அல்லது 23-ந்தேதி கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.