கோவா முதல்மந்திரியாக பதவியேற்றார் மனோகர் பாரிக்கர்

நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 13 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள பா.ஜ.க., பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரை முதல்மந்திரியாக முன்னிறுத்தியது. இதையடுத்து, கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா-வை நேற்று முந்தினம் சந்தித்த பாரிக்கர் தனது 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதையடுத்து, மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

 பா.ஜ.க ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நேற்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது, பாரிக்கர் முதல்வராக பதவியேற்க தடை இல்லை எனவும், நாளை மறுநாள் சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை தலைநகர் பனாஜியில் மனோகர் பாரிக்கர் முதல்மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவா முன்னாள் முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment