இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று காரைக்கால் வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று மாலை 6 மணிக்கு காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்துக்கு வருகின்றனர்.

ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 38 பேர் நாகை மீனவர்கள் 26 பேர் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் உள்ளபட 85 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் உள்ள சிறைகளில் கடந்த 2 மாத காலமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தணிக்கும் வகையில் இலங்கை சிறையில் உள்ள 85 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. இதையொட்டி அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

 விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரையும் மீட்டு வர இந்திய கப்பல்படை இன்று காலை இலங்கை விரைந்துள்ளது. நடுக்கடலில் 85 மீனவர்களையும் இந்திய கப்பல் படையினரிடம் இலங்கை கப்பல் படையினர் ஒப்படைக்கின்றனர்.

அங்கிருந்து மீனவர்கள் கப்பலில் இன்று மாலை 6 மணிக்கு காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்துக்கு வருகின்றனர். அவர்கள் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். பின்னர் மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகும் தமிழக மீனவர்களை வரவேற்க அவர்களது உறவினர்கள் காரைக்கால் துறைமுகத்தில் குடும்பத்தினருடன் வந்து காத்திருக்கின்றனர்.

Related posts

Leave a Comment