மதுரையில் நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டக் குழுவினர் திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெடுவாசல் திட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ஏற்கெனவே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அப்போது மக்கள் விரும்பவில்லையென்றால் கைவிடப்படும் என்று அவர் தெரிவித்தார். ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை தமிழக மக்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். நான் இன்று நெடுவாசல் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இதில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்தனர். ஆனால் போராட்டக் குழுவினரிடையே சில புரிதல் இன்னும் முழுமையடையவில்லை. அதனால், இரண்டாம் கட்டமாக டெல்லிக்கு நெடுவாசல் குழுவினரை அழைத்துச் சென்று பெட்ரோலியத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அப்போதும் அவர்களுக்கு விருப்பமில்லையென்றால் இந்த திட்டம் கைவிடப்படும் என்றார்.