பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பேரணியாக சென்று, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கால பைரவர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார்.
சிறப்பு பூஜைகள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாரணாசியில் வருகிற 8-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே வாரணாசியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதற்காக காலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு மாபெரும் பேரணி நடத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாசலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அஸ்சி, சோனார்புரா பகுதிகளை கடந்து முதற்கட்டமாக காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தது. அங்கு அவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
கோவிலில் சுமார் 1 மணி நேரம் இருந்த பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டார். அங்கும் அவர் சிறிது நேரம் இருந்து பைரவரின் ஆசி பெற்றார்.
மக்கள் அமோக வரவேற்பு
முன்னதாக பிரதமர் ஊர்வலமாக சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக அஸ்சி, சோனார்புரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பிரதமரின் வாகனம் மீது பூக்களை தூவி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பிரதமர் மீது மலர்களை தூவுவதற்காக சில பகுதிகளில் விஷேச எந்திரங்களும் வைக்கப்பட்டு இருந்தன.
மதன்புரா பகுதியில் ஏராளமான சிறுபான்மை இனத்தினர் பிரதமருக்கு மலர்க்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அவர் சென்ற இடமெல்லாம் ‘ஜெய் மோடி’, ‘ஹர ஹர மோடி’ மற்றும் ‘பா.ஜனதா ஜிந்தாபாத்’ உள்ளிட்ட கோஷங்களை தொண்டர்கள் முழங்கினர்.
சமாஜ்வாடி குற்றச்சாட்டு
மாலையில் 2-வது கட்ட பேரணியை மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றினார்.
இதற்கிடையே பிரதமரின் இந்த பேரணிக்கு பா.ஜனதா கட்சியினர் அனுமதி வாங்கவில்லை என சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டி இருந்தது. இது பேரணி அல்ல என்று கூறிய அந்த கட்சியினர், இது உள்ளூர் எம்.பி.யின் மக்கள் தரிசன யாத்திரை என்றும் தெரிவித்தனர்.