அஷ்டமத்தில் சனி எனக்கு இருக்குண்ணே;
எட்டு எனக்கு ஒத்துக்காது கேளுண்ணே;
இதை ஏழாக முடிஞ்சா மாற்றுண்ணே;
ஒன்பதாக ஆகினாலும் நல்லதுண்ணே;
எல்லோர்க்கும் இருக்க வேண்டும் பொது வழி.
எட்டு ஊருக்கு மட்டும் ஏன் தனி வழி?
எங்க ஊருக்கும் வேண்டாமா புது வழி?
நல்ல யோசிச்சு சொல்லுஙங்க மாற்று வழி.
இதில் மாட்டு வண்டிக்கு வழி இல்லை தெரியுமா?
ஆட்டு மந்தை சாலையைக் கடக்க முடியுமா?
ஜல்லிக்கட்டு காளைக்கு சிவப்பும் பச்சையும் புரியுமா?
கேட்கும் இடங்களில் கீழ்ப்பாலம் கிடைக்குமா?
கல்லூரி மாணவன், என்னையும் கேளுங்க.
பெண்கள் கல்லூரி நிறுத்தம், ஒன்று உண்டுங்க;
காவல் நிலையம் அருகில், அதை மாற்றுறாங்க;
சாலைக்காக இப்படி செய்வது நியாயமாங்க?
சாலை கட்டும் மேஸ்திரி கொஞ்சம் கவனிக்கணும்;
ஜப்பான், அமெரிக்கா சாலைகளை பார்க்கணும்.
அது போல் அடுக்கு மாடி சாலை மட்டும் கட்டணும்.
பறக்கும் ரயிலை போல வாகனமும் பறக்கணும்.
மூழ்கட்டும் பொய் குரல்கள்;; சிந்திப்பீர் ஐயா
எட்டு வழி சாலை, அது அமையட்டும் ஐயா
சேமிப்பும் வளர்ச்சியும், இனி எல்லோருக்கும் ஐயா
வாய்ப்பும் நம்பிக்கையும், இனி மகிழ்ச்சி தானே ஐயா
கை விட்டு போகும் மண் துயரம் தான் தாயே;
மண்ணோடு கனவுகளும் உண்டு, அறிவேன் தாயே.
இந்த கோரிக்கையே காணிக்கையாய் ஏற்றிடு தாயே;
நாட்டுக்கு ஒரு நல்ல வழி தர, உயர்ந்திடு தாயே.