அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 22-ந் தேதி இரவு இனவெறியால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்செயலில், அவரது இந்திய நண்பர் அலோக் மதசானியும், அமெரிக்கரான இயன் கிரில்லாட்டும் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) கைது செய்யப்பட்டார். இனவெறி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று அந்நாடு அதிபர் வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது என்று கூறிஉள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் இயன் கிரில்லாட்டுக்கு அனுப்பியுள்ள செய்தியில், ”இயன் கிரில்லாட்டின் வீரச்செயலுக்கு இந்தியா தலை வணங்குகிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
இயன் கிரில்லாட் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பயணம் செய்யுமளவுக்கு அவர் குணமானதும், அவரும் அவரின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.