ருத்ர தாண்டவம் – மூன்று செயல் நாடகம்



இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

கதாபாத்திரங்கள்
சிங்கவரம் மன்னன் அங்குராஜ்
சிங்கவரம் சேனாதிபதி வீரபத்திரன்
தசரதபுரம் மன்னன் தேவேந்திரன்
தசரதபுரம் இளவரசி அம்பாலிகா
தசரதபுரம் அரசி தேவயானி
தசரதபுரம் அரசவை மந்திரி சமாழி வேலன்

வருடம்: 1905

ACT 1

இடம்: தசரதபுரம் அரசவை

அரண்மனை காவலர்:   சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன் வரார் வரார் வரார்.

மன்னன் தேவேந்திரன்:   வாருங்கள்! வாருங்கள்! சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன், உங்கள் இருவரையும் தசரதபுரம் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம். வருக! வருக! அமருங்கள்.

அரசவை மந்திரி சமாழி வேலன்:   சிங்கவரம் மன்னரையும் சேனாதிபதியையும் வரவேற்பதில் இந்த தசரதபுரம் அரசவை மிக மகிழ்ச்சி கொள்கிறது.

மன்னன் அங்குராஜ்:   மன்னர் தேவேந்திரன்னுக்கும் தசரதபுரம் அரசவைக்கும் எங்கள் வணக்கங்கள். எங்கள் வருகை ஒரு மரியாதைக்குரிய வருகை ஆகும். தென்மலைநாட்டுக் இராணுவ கிளர்ச்சியை முறியடித்தோம். அந்த கிளர்ச்சியை அடக்கி விட்டு சிங்கவரம் திரும்பும் தருணம்.

மன்னன் தேவேந்திரன்:   அறிந்தோம். தென்மலைநாட்டுக் இராணுவ கிளர்ச்சியை வெற்றிகரமாக அடக்கி எறிந்திருக்கிறீர்கள். தென்மலைநாடு மன்னருக்கு நீங்கள் கை கொடுத்து அந்த நாட்டுக்கு நிலையான ஆட்சி கிடைக்க வழி செய்திருக்கிறீர்கள். இந்தக் கிளர்ச்சி தென்மலைநாட்டுக்கு மட்டும் அல்ல தசரதபுரத்திற்கும் அச்சுறுத்தலாக தான் இருந்துள்ளது. இதனால் தசரதபுரம் மக்களும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்

மன்னன் அங்குராஜ்:   அந்த கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் நாடு திரும்பும் வழி. அப்பொழுது ஒரு யோசனை. உங்களையும் சந்தித்து செல்லலாம் என. அரண்மனையில் வந்த பின் அறிந்தோம் இன்று தங்கள் புதல்வி அம்பாலிகாவின் ஜென்ம தினம் என்று. அப்படியென்றால் இளவரசி அம்பாலிகாவையும் நேரில் வாழ்த்தலாமே என்று நினைத்தோம்.

மன்னன் தேவேந்திரன்:   மிக்க நன்றி, இன்று தசரதபுரத்திற்கு ஒரு விசேஷமான நாள் தான். தங்கள் வருகையால் இந்த ஜென்ம தினம் மிக சிறப்பாகிவிட்டது. சற்றுப் பொறுங்கள், இளவரசியை அரசவைக்கு வரச் சொல்கிறேன்.

மன்னன் அங்குராஜ்:   அது வேண்டாம் என்று நினைக்கிறோம் தசரதபுரம் மன்னா. இளவரசியை நாங்கள் சென்று காண்கிறோம். அதுதானே சிறந்த பண்பு.

அரசி தேவயானி:   மிக்க மகிழ்ச்சி. சிங்கவரம் பற்றியும் உங்களைப் பற்றியும் அவள் நிறைய பேசுவது உண்டு. அவளைக் காண நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று அறிந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வாள். நானே உங்களை இளவரசி அம்பாலிகாவிடம் அழைத்துச் செல்கிறேன்.

மன்னன் தேவேந்திரன்:   நல்லது! அம்பாலிகாவை கண்டு வாருங்கள். இன்னும் ஒரு இனிய செய்தி. சற்று நேரத்தில் மேற்கத்திய நாடுகளிலிருந்து சில விஞ்ஞானிகள் நம் அரசவைக்கு வருவார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒரு மகத்தான தொழில்நுட்ப திட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள், சரிதானே மந்திரி சமாழி வேலா?

அரசவை மந்திரி சமாழி வேலன்:   ஆம், இணையதளம். இதில் தசரதபுரத்திற்கும் பெரிய பங்கு உண்டு. இது தசரதபுரத்திற்கு; ஏன் எல்லா தமிழக ராஜ்ஜியங்களுக்கே பெருமிதம் அளிக்கும் விஷயம்.

மன்னன் அங்குராஜ்:   என்ன ஆச்சரியம்! ஒரு பிரம்மாண்ட திட்டத்தில் தசரதபுரமும் உண்டு என்றால் நமக்கு எல்லாருக்கும் பெருமிதம் தானே. மிக்க மகிழ்ச்சி. அந்த தொழில்நுட்ப திட்டத்தை அறிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன். இளவரசியைக் கண்டு வருகிறேன்.

அரசி தேவயானி:   மந்திரி சமாழி வேலா; மன்னர் அங்குராஜின் வருகை பற்றி இளவரசிக்கு செய்தி செல்லட்டும்.


 
 
 

ACT 2

இடம்: இளவரசியின் அரண்மனை பகுதி: ராஜ வரவேற்பு அறை

அரசி தேவயானி:   மகளே அம்பாலிகா, இதோ உன்னை நேரில் வாழ்த்த சிங்கவரம் மன்னன் அங்குராஜும், சேனாதிபதி வீரபத்ரனும் வந்துள்ளார்.

இளவரசி அம்பாலிகா:   சிங்கவரம் மன்னருக்கும், சேனாதிபதிக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். வாருங்கள், வாருங்கள்! என் ஜென்ம தினத்தன்று என்னை காண நீங்கள் வந்திருக்கிறீர்கள், என்னால் நம்ப முடியவில்லை.

மன்னன் அங்குராஜ்:   இளவரசிக்கு எங்கள் இனிய ஜென்ம தின வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் என்னாலும் குறையாமல் கிடைக்கட்டும். எங்கே சேனாதிபதி ஜென்ம தின பரிசு?

சேனாதிபதி வீரபத்திரன்:   இதோ இருக்கிறது மன்னா!

மன்னன் அங்குராஜ்:   எங்களின் சிறிய பரிசு, தாமரை சரஸ்வதி தேவியின் பொன் சிற்பம். தேவியின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும்.

இளவரசி அம்பாலிகா:   (பரிசை வாங்குகிறாள்) மிக்க நன்றி. எவ்வளவு அழகாய் இருக்கிறது. அம்மா பாருங்கள் இதை நான் லண்டன் எடுத்துச் செல்வேன்.

அரசி தேவயானி:   சிங்கவரம் மன்னரே, அமரவும். இவளை நினைத்தால் தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. விவாக வயது கடந்து விட்டது. இன்னும் படிப்பும் ஆராய்ச்சியுமாக தான் இருக்கிறாள். பெற்றோர் எங்களுக்கும் கடமை உண்டல்லவா? இவளுக்கு நீங்கள் தான் கொஞ்சம் அறிவுரை கூறவும்.

இளவரசி அம்பாலிகா:   அங்குராஜ் மன்னரும் என்னைப்போல் விவாகம் ஆகாதவர் தானே அம்மா. அவரை ஏன் சங்கடப் படுத்துகிறீர்கள்?

அரசி தேவயானி:   அப்படி அல்ல அம்பாலிகா, சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. ஒரு அரச குடும்பம் ஆகட்டும் அல்ல எந்த ஒரு சாதாரண குடும்பம் ஆகட்டும், அதில் ஆணும் பெண்ணும் சமமல்ல, அவர்களிடமிருந்து ஒரு சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள், அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் வெவ்வேறு தான்.

இளவரசி அம்பாலிகா:   உண்மைதான் அம்மா எனக்கு புரிகிறது. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் இது என்ன நியாயம். ஒரு பெண் விவாகம் செய்ய விருப்பமில்லை என்றால், அது தவறு ஆனால் இது ஒரு ஆணுக்கு பொருந்தாது. ஏன் பெண்ணுக்கு மட்டும்?

மன்னன் அங்குராஜ்:   தசரதபுரம் அரசிக்கு ஒரு வேண்டுகோள், கவலை வேண்டாம். உங்கள் புதல்வி ஒரு சாதாரண பெண் அல்ல. நீங்கள் அவளைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அயல்நாட்டு கல்வி அல்லவா, மேற்கத்திய சிந்தனைகள். நமது கலாச்சாரமும் பண்பாடும் பற்றி அறிவது இவர்களுக்கு கடினம் தான்.

இளவரசி அம்பாலிகா:   அது இருக்கட்டும் அம்மா மன்னர் ஏன் இதுவரை விவாகம் செய்யவில்லை? அதைக் கேட்டீர்களா?

அரசி தேவயானி:   என்ன இது அம்பாலிகா! விருந்தினரை உபசரிக்கும் முறை இதுவா? இதை அவமதிப்பாக தானே கருதுவார். நீ மன்னிப்பு கேட்க வேண்டியவள்.

மன்னன் அங்குராஜ்:   பொறுங்கள் அரசி, எதற்கு மன்னிப்பு? இளவரசியின் மனதில் தோன்றியதை ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் கேட்டார்கள், இதில் என்ன தவறு? இதை என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்.

சேனாதிபதி வீரபத்திரன்:   மன்னரின் விவாகம் பற்றி சிங்கவரம் ராஜ மாளிகையில் பேசாத நாளில்லை. கேட்டால் இது இப்ப முக்கியம் இல்லை என்று சொல்வார். இப்படியே காலம் ஓடிவிட்டது. தன் பிரஜாவின் மேல் உள்ள அக்கறை, ராஜ்யத்தை பாதுகாத்து நல்லாட்சி நிலைத்துநிற்க, இதில் அவருடைய சொந்த வாழ்க்கையை கூட மன்னர் மறந்து விட்டார்.

மன்னன் அங்குராஜ்:   பதினைந்து ஆண்டுகளுக்கு முன், சிங்கவரம் ராஜா குலசேகர பாண்டியன் இறந்தபோது அவர் அண்ணன் மகன்கள் இடையே சிம்மாசனத்திற்கு பெரிய போட்டி நடந்தது. ஆனால் இவர்களால் சிங்கவரம் ராஜ்யத்திற்கு எந்த விதமான நன்மையும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என்றே மக்கள் கருதினர். சில தென் மேற்கு நாடுகள் சிங்கவரம் மேல் படை எடுக்கக்கூடும் என்ற செய்திகளும் வந்தது. அப்போது சிங்கவரம் சேனாதிபதியாக இருந்த நான் சிம்மாசனத்தை கைப்பற்ற வேண்டிய நிலைமை உண்டாகிவிட்டது.

சேனாதிபதி வீரபத்திரன்:   சிங்கவரத்துக்கு அது ஒரு சோதனை காலம் என்று தான் சொல்லவேண்டும். அதிலிருந்து நாட்டை சாமர்த்தியமாக மன்னர் மீட்டெடுத்தார்.

மன்னன் அங்குராஜ்:   மன்னன் ஆன பின் அரசு பணி ஈடுபாட்டில், நான் விவாகம் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. காலங்களும் சென்றன.

சேனாதிபதி வீரபத்திரன்:   நமது தமிழ் ராஜ்யங்களில் சுயம்வரத்தில் கலந்து கொள்ளாத ஒரே மன்னன், மன்னர் அங்குராஜ் தான் என்று அனைவரும் அறிவார்.

இளவரசி அம்பாலிகா:   சேனாதிபதி வீரபத்திரன் என்னை மன்னிக்கவும். ஆனால் நான் கேள்விப்பட்டது மன்னர் அங்குராஜ் மன்னர் ஆனவுடன் மூன்று சுயம்வரத்தில் பங்கேற்றார்.

சேனாதிபதி வீரபத்திரன்:   ஆஹா ஆஹா ஆஹா. மன்னர் அங்குராஜ் சுயம்வரத்தில் பங்கேற்றாரா? வேடிக்கையான வதந்திகள்.

அரசி தேவயானி:   இது என்ன பேச்சு? மன்னரின் செயலைப் பற்றி, அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விளக்கம் கேட்கிறாய நீ? கல்வி இருந்தும் பண்பு இல்லை என்றால் அந்தக் கல்விக்கு தான் என்ன பலன்?

மன்னன் அங்குராஜ்:   தசரதபுரம் அரசி, என்னை மன்னிக்கவும். உங்களுக்கு அறியாதது ஒன்றுமில்லை. தங்கள் புதல்வி தவறாக ஒன்றும் கேட்கவில்லை. இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் கடமைபட்டிருக்கிறேன். தசரதபுரம் இளவரசி, நீங்கள் கேள்வி பட்டதெல்லாம் உண்மைதான். என் தந்தை ஒரு சத்ரியனும் படை தளபதியாக இருந்ததினால் நானும் என்னை சத்ரியன் என்றே கருதினேன். ஆனால் என் தாய் ஒரு வைஷ்ய அரசு கவி என்பதினால் நான் சத்ரியன் அல்ல என்று அந்த சுயம்வரங்கள் மூலம் தான் உணர்தேன்.

இளவரசி அம்பாலிகா:   சிங்கவரம் மன்னரை சங்கட படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். வருந்துகிறேன் மன்னித்துவிடுங்கள்.

அரசி தேவயானி:   அகங்காரம்!

மன்னன் அங்குராஜ்:   அப்படி ஒன்றும் இல்லை உங்கள் சந்தேகத்தை நீங்கள் கேட்டீர்கள். இந்த நன்னாளில் இளவரசியை சங்கடப் படுத்தி விட்டேன் என்று நான் நினைக்குறேன்.

இளவரசி அம்பாலிகா:   அப்படி ஒன்றும் இல்லை. அந்த வருத்தம் சிங்கவரம் மன்னருக்கு வேண்டாம், சரி அது இருக்கட்டும் நல்ல பெற்றோர்கள் உங்களுக்கு, நீங்களும் கவிதை எழுதுவீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

சேனாதிபதி வீரபத்திரன்:   ஏன் இல்லை? எங்கள் ராஜமாதா போல் மன்னரும் நன்றாக கவிதை எழுதுவார். ஒரு போர் வீரரின் தைரியம் அவன் சுழற்றும் வாளில் பிரதிபலிக்கும். ஒரு கவியின் மனசு அவன் எழுதும் வார்த்தைகளில் பிரதிபலிக்கும்.

இளவரசி அம்பாலிகா:   அம்மா நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை? நீங்களும் ஒரு தமிழ் கவியாக இருந்திருந்தால் நானும் கவி ஆகியிருப்பேன் அல்லவா?

அரசி தேவயானி:   ஆம் மகளே! உனக்கு அந்த ஒரு குறை மட்டும் தான் உள்ளது.

இளவரசி அம்பாலிகா:   போங்கம்மா. சிங்கவரம் மன்னரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. எனக்காக ஒரு கவிதை பாடவும்.

மன்னன் அங்குராஜ்:   கவிதையா இப்பொழுது? எதைப்பற்றி?

இளவரசி அம்பாலிகா:   எதைப்பற்றியும். ஏன் என்னைப் பற்றியும் பாடலாமே.

மன்னன் அங்குராஜ்:
கண் எட்டா தூரத்து மலரொன்று,
கண்காணாத அழகை மனம் கண்டதே அன்று.
செவி கேட்டு உண்டாகிய மனச் சித்திரம்;
அழகு சித்திரத்தை வீழ்த்தியதே கண்கள் இன்று.
என் முன்னே புன்னகைத்து நிற்கிறாள் பார்!

இளவரசி அம்பாலிகா:   அருமையான கவிதை என்ன அற்புதமான வரிகள். கேட்பவர்கள் நான் ஒரு மிக அழகான பெண் என்றே கருதுவார்கள். எல்லோரும் என்னை சிங்கவரம் மன்னன் இதுவரை காணாத ஒரு அழகி என்றே நினைப்பார்கள்.

மன்னன் அங்குராஜ்:   ஹா ஹா ஹா. இதில் என்ன சந்தேகம் இளவரசி. இது உண்மைதானே. எத்தனை சிற்பிகள், கவிஞர்கள், ஓவியர்கள் படைப்பிற்கு நீங்கள் ஊக்கமாக இருக்கிறீர்கள்.

இளவரசி அம்பாலிகா:   ஹா ஹா ஹா. சிங்கவரம் மன்னரின் பேச்சு மிக வேடிக்கையாகவே இருக்கிறது.

அரசி தேவயானி:   அம்பாலிகா! கர்வம் கொள்ளாதே ஜாக்கிரதை. கவனித்து பேசவும்.

சேனாதிபதி வீரபத்திரன்:   இளவரசியின் பேச்சு சிறிது வேதனையாகத்தான் இருக்கிறது.

இளவரசி அம்பாலிகா:   கொஞ்சம் பொறுங்கள்; இதோ வருகிறேன். (சென்று ஒரு பாவை விளக்கை கொண்டு வரார்). இந்த விளக்கு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

மன்னன் அங்குராஜ்:   சேனாதிபதி! சென்ற தை கோலப் போட்டிக்கு நாம் அளித்த பரிசு அல்லவா இந்த பாவை விளக்கு?.

இளவரசி அம்பாலிகா:   சரியாக சொன்னீர்கள். நானும் என் தோழிகளும் அதில் கலந்து கொண்டோம், பரிசுகளும் வென்றோம். அன்று தான் நான் உணர்ந்தேன் ஒரு பெண்ணின் அடையாளம் அவள் அணியும் ஆபரணங்களும் வஸ்திரங்களும் மட்டுமே. என் புன்னகையும், என் பேச்சும் விட நான் அணிந்திருக்கும் ஆபரணமும், வஸ்திரமும் தான் எனக்கு பலம் அளிக்கிறது. அதுவே தான் என் அடையாளம்.

சேனாதிபதி வீரபத்திரன்:   தவறு நடந்திருக்கிறது மன்னா. மிகப் பெரிய தவறு.

இளவரசி அம்பாலிகா:   ஆனால் இதுதான் சரியானது. மக்களுக்கு பொருட்கள் மீது மதிப்பும் ஆசை உண்டாக வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் பெருகும், ராஜ்யங்கள் வளரும், நாட்டு மக்களின் வாழ்வுமுறை மேம்படுத்தப்படும். இதற்காகவே தான் இணையதளம் ஒன்றை உருவாக்க உள்ளோம்.

அரண்மனை பணிப்பெண்:   ஒரு செய்தி வந்துள்ளது. ஸ்காட்டும் அவர் குழுவும் அரண்மனை எட்ட உள்ளார். அவர்கள் நேராக அரசவைக்கு வருவார்கள்.

இளவரசி அம்பாலிகா:   லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து என்னுடைய சக ஆராய்ச்சியாளர்கள்.

மன்னன் அங்குராஜ்:   ஆம்! ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சி என்று தசரதபுரம் மன்னர் சொல்லியிருந்தார். தசரதபுரத்தின் இந்த முயற்சியில் சிங்கவரம் பெருமை கொள்கிறது இன்று தெரிவித்தேன்.

இளவரசி அம்பாலிகா:   நாங்கள் ‘இணையதளம்’ என்னும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். உலகில் எங்கிருந்தும் யாவரும் ஒரே இடத்தில் கருத்துக்களை பரிமாற தகுந்த ஒரு தொழில்நுட்பம் உருவாக்க உள்ளோம்.

மன்னன் அங்குராஜ்:   ஒரே இடத்தில் கருத்துக்கள் பரிமாற்றமா? எனக்குத்தான் சிறிது குழப்பமாக இருக்கிறது.

இளவரசி அம்பாலிகா:   குழப்பம் ஏன்? இதனால் எல்லோரும் நன்மை அடைவார். சமுதாயத்தில் எல்லா தரப்பினருக்கும் இதன் மூலமாக நன்மை கிடைக்கும்; பொருளாதாரம் வளரும் நாடு செழிக்கும். முக்கியமாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்.

மன்னன் அங்குராஜ்:   கேட்க மிக நன்றாக இருக்கிறது. வாருங்கள் அரசவைக்கு செல்வோம்.


 
 
 

ACT 3

இடம்: தசரதபுரம் அரசவை

மன்னன் தேவேந்திரன்:   அனைவருக்கும் வணக்கம். தசரதபுரம் அரசவையை கௌரவிக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து விருந்தினர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன். இளவரசி அம்பாலிகாவின் ஜன்ம தினமான இன்று நம் எல்லோரும் கூடி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நல் தருணத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிங்கவரம் மன்னர் அங்குராஜ் மற்றும் அவரது சேனாதிபதி வீரபத்திரன்னுக்கும் நமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.

அரசவை மந்திரி சமாழி வேலன்: வணக்கம்.   The Royal Court of Dasarathapuram takes pride in welcoming its dignified guests today. A warm welcome to the distinguished scholars from the University of London. We also have with us Rajah Anguraj, the King of Singavaram and Singavaram First Commander Veerabthiran. என் முன் அமர்ந்திருக்கும் லண்டன் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் பேராசிரியர் வால்டர் ஸ்காட், திரு. பால் லுட்விக், திரு. அலெக்ஸ் செபாஸ்டியன் அவர்களை இந்த அரசவை வரவேற்கிறது. நாம் அனைவரும், மற்ற எல்லா தசரதபுரம் மக்களுடன் இணைந்து நமது இளவரசிக்கு இனிய ஜென்ம தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இனி இளவரசி உரைப்பார்.

இளவரசி அம்பாலிகா:   தசரதபுரம் பிரஜைக்கும் இந்த அரசவைக்கும் எனது மனமார்ந்த நன்றி. தனது வாழ்த்துக்களுக்கும், இன்று நம்மோடு அரசவையின் விவாதத்தில் பங்கேற்க சம்மதித்த சிங்கவரம் மன்னர் அங்கு ராஜுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். இனி லண்டன் பல்கலைக்கழகத்தில் என் சக அறிவியல் அறிஞர்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர் பேராசிரியர் வால்டர் ஸ்காட் வயர்லெஸ் டெலிகிராப்பி மற்றும் கம்யூனிகேஷன் ப்ரோடோகால் அறிஞர் ஆவர். பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆராய்ச்சி வழிகாட்டியாக இருக்கிறார். இவர் திரு. பால் லுட்விக். இவர் ஒரு சிக்னலிங் சிஸ்டம்ஸ் வல்லுநர் ஆவர். பல்கலைக்கழகத்தில் ஒரு விருந்தினர் பேராசிரியர் ஆகவும் பெர்லின் ரயில்வேக்கு ஆலோசகர் ஆகவும் இருக்கிறார். இவர் திரு. அலெக்ஸ் செபாஸ்டியன் என்னுடன் டிஜிட்டல் சிக்னல் பிராசஸிங் முனைவர் ஆராய்ச்சி யில் உள்ளார்.

அரசவை மந்திரி சமாழி வேலன்:   லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து நாம் உருவாக்க உள்ள இணையதளம் என்னும் தொழில்நுட்பம் அனைவரும் அறிந்ததே. நமது ராஜ்யத்தின் இந்த முயற்சி நமக்கு மட்டுமல்ல எல்லா தமிழ் ராஜ்யங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஒட்டு மொத்த மனித சமுதாய மேம்பாட்டுக்கு இந்த தொழில்நுட்பம் ஒரு அடிக்கல்லாக விளங்கும்.

மன்னன் தேவேந்திரன்:   ஆம் இணையதளத்தினால் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்மையே காத்திருக்கிறது. வர்த்தகம், கலாச்சாரம், கல்வி, கலை; ஏன் விஞ்ஞானத்தில் கூட இதுவரை கண்டிராத நன்மைகள் இதன் மூலம் நமக்கு கிடைக்கும். மன்னர் அங்குராஜ், தாங்கள் இதை பற்றி ஒன்றும் கூறவில்லையே.

மன்னன் அங்குராஜ்:   லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் வால்டர் ஸ்காட், திரு. பால் லுட்விக் மற்றும் திரு. அலெக்ஸ் செபாஸ்டியன்; அனைவருக்கும் என் வணக்கங்கள். இணையதளம் தொழில்நுட்பம் உலகத்தின் முன்னோடி தொழில்நுட்பமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சரி, இந்த தொழில்நுட்பம் மூலம் உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் அவரவர் ஆர்வம் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு மற்ற நபர்களுடன் கருத்துக்களை பரிமாற்றம் செய்யலாம், அல்லவா?

மன்னன் தேவேந்திரன்:   நிச்சயமாக! இது உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று கூட ஒரு மேடையாக அமையும்.

மன்னன் அங்குராஜ்:   எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் இதனால் யாருக்குமே, எப்போதுமே எந்த வகையிலும் பாதிப்பு இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?

இளவரசி அம்பாலிகா:   சிங்கவரம் மன்னருக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்? உலகின் ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதினால் நமக்கு இதனால் உள்ள பலன் என்ன, இந்த தொழில்நுட்பத்தினால் இக்காலத்திலோ பிற்காலத்திலோ மனித குலத்துக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்றும் கண்டறிந்தோம். ‘பிசபிலிட்டி ஸ்டடி’ செய்தோம். இணையதளத்தினால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை என்றும் மாறாக பெரிய நன்மைகளை காத்திருக்கிறது, என்றும் அறிந்தோம்.

மன்னன் அங்குராஜ்:   நமது செயல்களால் எதிர்காலத்தில் உண்டாகும் நன்மையோ தீமையோ நம்மால் இன்று கண்டறிவது மிகக் கடினமானது. காலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நம் முன் கூட்டியே துல்லியமாக கணிக்க இயலாது. ஆனால் இன்று இது தேவையா இல்லையா என்று மட்டும் தெளிவாக அறியலாம். இணையதளத்தினால் மனித சமூகவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதே எனது கருத்தாகும்.

இளவரசி அம்பாலிகா:   அப்படி ஏதாவது மாற்றங்கள் இந்த தொழில்நுட்பம் மூலம் காத்திருப்பது என்றால், அது அனைத்தும் மக்களின் நலனுக்கே ஆகும். இதில் ஏது சந்தேகமும் இல்லை.

மன்னன் அங்குராஜ்:   நான் உபயோகிக்கும் சொற்களுக்கு மன்னிக்கவும். இதில் கண்டிப்பாக நன்மைகள் உண்டு, ஆனால் எல்லா நன்மைகளும் யாரும் கேட்காதவை தான், அனைத்தையும் யாரும் எதிர்பார்ப்பதில்லை. இருந்தபோதும், இந்த எல்லா நன்மைகளை விட மிகக்கடினமான இழப்பே எதிர்காலத்தில் உண்டு. நமக்கு தீமை விளைவிக்கும் எண்ணங்களும், முயற்சிகளும் நாம் கண்டதில்லையா? இவையெல்லாம் தீப்பொறிகள், அங்கங்கே உண்டாகி அணைந்து விடுகிறது. இணையதளம் ஒன்று உருவாகிவிட்டால் எல்லா தீப்பொறியும் ஒரே இடத்தில் இணைந்து தீயாகப் பற்றி எரியும். தசரதபுரம் உண்டாக்கும் இந்த இணையதளம் தொழில்நுட்பம் ஒரு நாள் மனித இனத்திற்கு பலவகையில் அச்சுறுத்தல் தரக்கூடும்.

பேராசிரியர் வால்டர் ஸ்காட்:   Sorry to interrupt you Ambalika. But can I know the views of Rajah Anguraj? He doesn’t look happy; seems to have some concerns.

இளவரசி அம்பாலிகா:   The Rajah disagrees that Inaiyathalam can do only good. He says it is too difficult today to anticipate the issues arising from Inaiyathalam that would sometime later confront man. He feels Inaiyathalam would ultimately harm mankind despite all the good it can do. I don’t know why but he sees every detrimental thought and effort as a spark that is automatically extinguished wherever ignited. But with Inaiyathalam he says all sparks will meet at one place and ignite a fire.

பேராசிரியர் வால்டர் ஸ்காட்:   Can he explain this?

இளவரசி அம்பாலிகா:   மன்னிக்கவும்; சிங்கவரம் மன்னரின் பேச்சு மிக வேடிக்கையாக இருக்கிறது. அனைத்தும் ஆதாரமற்றது. மனித இனத்திற்கு அச்சுறுத்தல் என்பதற்கான விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறார்கள். தங்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் அடிப்படை ஆதாரம் உண்டா?

மன்னன் அங்குராஜ்:   ஆதாரமா? ஹா ஹா ஹா. எல்லாமே இதற்கு ஆதாரம் தான். நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் நாம் இன்று வாழ்வதில்லை. பல நூறு ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின் தான் நாம் இன்று இந்த நிலை அடைந்தது இருக்கிறோம். ஆனால் உங்களது தொழில்நுட்பம் அன்று இருந்திருந்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே இந்த வளர்ச்சியை நாம் அடைந்து இருப்போம்.

இளவரசி அம்பாலிகா:   அப்படி என்றால் இந்த தொழில்நுட்பம் நல்லதுதானே, பயனுள்ளதுதானே. நீங்கள் ஏன் வருந்துகிறார்கள்? ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?

மன்னன் அங்குராஜ்:   ஒரு சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி என்றால் இன்னும் சில ஆண்டுகளில் என்ன வளர்ச்சி இருக்கும். மிக வேகமாக வளர்ந்து கொண்டே இருப்போம். மனித வளர்ச்சிக்கு வேண்டியே தலைமுறை தலைமுறையாக, முடிவில்லாமல் உழைத்துக் கொண்டிருப்போம். இந்த உழைப்பே நம் வாழ்க்கையாய் மாறிடும். இந்த அசுர வளர்ச்சியால் யாருக்கும், எப்போதும் எந்த விளைவும் இருக்காதா? பூமி இருக்கும் வரை மனிதன் இருக்க வேண்டும். நம் பூமி என்றென்றும் இருக்கக் கூடியவை. வளராத பூமியில் மனிதன் மட்டும் எப்படி வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டே இருக்க முடியும்? இதற்கு பின்விளைவுகள் இருக்காதா?

இளவரசி அம்பாலிகா:   Dr. Scott. The Rajah’s point is that contemporary life is different from that about several thousand years back. This change he says would have been realized in just a few years with Inaiyathalam. We will all be constantly working, across generations for our development and growth rather than living. This apart, our endless phenomenal growth on the face of the Earth that itself doesn’t grow, cannot escape adverse consequences with time. He seeks to know if there would be no adverse impact across time with such human activities and if so, would it be possible to establish it now.

பேராசிரியர் வால்டர் ஸ்காட்:   I still don’t agree with his view of adverse consequences. How can people who collaborate to develop gadgets or ideas to help improve man, end up harming anyone? The Rajah must trust that all developments across time will not strip man of his humane values and concern for others. As long as this is valid, he will always be capable of resolving any issues that crop up with time.

பால் லுட்விக்:   Even assuming the Rajah to be right, man can always retrace his path when there is a consensus that there is a crisis. Many times we’ve all returned along the same path we had gone up. I am sure there can be no conflict of opinion among man in the face of an impending crisis.

மன்னன் அங்குராஜ்:   வந்திருக்கும் நிபுணர்களின் கருத்து என்னவோ?

இளவரசி அம்பாலிகா:   மனித நலனுக்காக எடுக்கப்படும் முயற்சிகளும், உருவாக்கப்படும் தொழில்நுட்பமும், இயந்திரங்களும் மனித இனத்திற்கு எப்படி அச்சுறுத்தலாக இருக்க முடியும்?

மன்னன் அங்குராஜ்:   மீண்டும் கூறுகிறேன், காலம் கொண்டுவரும் மாற்றங்களை இன்று கணிக்க முடியாது. ஆனால் அவை அனைத்தும் நம் செயல்களின் பிரதிபலிப்பாகும். இன்று சமுதாயத்தில் நாம் நிலைநிறுத்தும் சிந்தனையும் கொள்கைகளும் எதிர்க்கும் சக்திகள் இணையதளம் மூலம் ஒன்று கூடும். எதிர்காலத்தில் நாம் இன்று சிந்திக்க முடியாத பல கொள்கைகளை செயல்படுத்த நேரிடும். அதுமட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் இந்த பூமியில் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ வேண்டும். இணையதளம் மூலம் புதிய முயற்சிகள் வேகமாக பரவும். பஞ்சபூதங்களில் ஏதேனும் ஒன்றில் சிறிய மாற்றம் போதுமே, மனித குலத்திற்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் அது பெரிய அச்சுறுத்தலாக மாற.

மன்னன் தேவேந்திரன்:   நீங்கள் கூறுவது அனைத்தும் சரி என்றே எடுத்துக்கொள்வோம். ஆனால் அப்படி ஒரு நிலைமை மனிதன் உணர்ந்தால், அந்த முயற்சியைக் கைவிட்டு பின் செல்லலாமே.

மன்னன் அங்குராஜ்:   அது சாத்தியமல்ல தசரதபுரம் மன்னரே. காலத்தோடு இணைந்தது நம் வாழ்க்கை. காலம் என்ற பாதை ஒற்றை வழிதான், அதில் திரும்பி வர முடியாது. வரும் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை சந்தித்தே தீர வேண்டும் வேறு வழி இல்லை.

இளவரசி அம்பாலிகா:   Dr. Scott; he says with the Inaiyathalam, people who seek undesirable societal changes would get together and strengthen their interests. In the future our society will implement policies that are absolutely unthinkable today. With regard to crisis, any significant change in any of the panchaboothas or the five elements of air, water, land, fire, and space is enough to cause adverse consequences to all creatures. His view is that we cannot retrace our path to get back on the face of adversity. Time is a one way path that is intricately woven to each one’s life. Man will have to face the adversities and consequences arising with time.

பேராசிரியர் வால்டர் ஸ்காட்:   Honestly Ambalika, I don’t know. This is something we just can’t ignore and go ahead. We didn’t foresee the possibility of a larger social impact of Inaiyathalam as it should have. We know that the scope for exchange of ideas and information with Inaiyathalam is unprecedented and of mammoth scale. This obviously should have its own consequences too. Requires a deeper look at the stake our Inaiyathalam could have for the future of man.

மன்னன் அங்குராஜ்:   மிகவும் சங்கடமாக இருக்கிறது. இப்போதுதான் உணர்கிறேன். தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஒரு புதிய தொழில்நுட்பத்தை நீங்கள் ஆவலுடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரத்தில் நான் அதன் குறைகளை எடுத்து உரைத்தேன். நான் இப்படி செய்திருக்கக் கூடாது. சிங்கவரம் சாசனத்தில் இதற்கு இடமில்லை; மீறி விட்டேனோ? அதுவும் இளவரசியின் ஜென்ம தினத்தன்று.

இளவரசி அம்பாலிகா:   சிங்கவரம் மன்னர் வருத்தப்பட தேவையில்லை. இன்று இந்த அரசவையில் நீங்கள் கூறியவை யாவும் சிந்திக்க வேண்டியவையே. உங்கள் பங்கேற்பும் கருத்துக்களும் எங்களுக்கு மிக அவசியமானதே. நீங்கள் உரைத்தது அனைத்தும் மனித எதிர்கால நன்மைக்கு தானே. உங்கள் கடமையைத்தான் செய்தீர்கள்! நீங்கள் இல்லையெனில் நாங்கள் இதை அறிந்து இருக்க இயலாது. இதைதான் திரு. ஸ்காட்டும் கூறுகிறார்கள்.

மன்னன் அங்குராஜ்:   கவலை வேண்டாம், வழி உண்டாக்குவோம். ஒரு தொழில்நுட்பத்தினால் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் உண்டு என்றால் அதை கைவிடுவதே நல்லது. ஆனால் அதே தொழில்நுட்பத்தினால் மக்களுக்கு எதிர்பாராத நன்மையும் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றால் அதை கைவிடாமல் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். நீங்கள் விரும்பினால் நாம் அனைவரும் ஒருமுறை சிங்கவரம் அரசவையில் மீண்டும் கூடி விவாதிப்போம்.

மன்னன் தேவேந்திரன்:   நல்லது. அப்படியே ஆகட்டும்.

மன்னன் அங்குராஜ்:   உங்கள் அனைவரையும் சிங்கவரம் அரசவையில் வரவேற்க காத்திருக்கிறேன். சேனாதிபதி வீரபத்திர, ராஜ வரவேற்பில் நாம் வண்ணக் கோலங்களை மறந்துவிடக்கூடாது. அதுவும் இளவரசி அம்பாலிகாவின் வரவேற்புக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

இளவரசி அம்பாலிகா:   ஹா ஹா ஹா. அந்த கோலங்களை காண ஆவலாக இருக்கிறேன்.

Leave a Comment